பிக்குமார்கள் அனைத்து இடங்களிலும் எனது பெயரை உச்சரிக்கின்றார்கள்: கலவரம் வெடிக்கும்! சாணக்கியன் ஆதங்கம் (Video)
சீனாவுக்கு நிலங்களை தாரைவார்த்தபோது வாயை மூடிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எங்கிருந்து வந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(24.08.2023) உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் இந்து - பௌத்த முறுகல் ஏற்படும் என்று மிகவும் பாரதூரமான செய்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இலங்கையின் பத்திரிக்கை ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
எங்களை தேச துரோகி என அழைக்கின்றனர். நேற்று அமைச்சர் ஒருவரும் சபையில் எங்களின் பிரதிநிதி ஒருவரை தேசத்துரோகி என கூறுகிறார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சிலர் நாட்டுக்குள் இருப்பதாக மற்றுமொரு அமைச்சர் கூறுகிறார்.
கடந்த காலங்களில் சில தேரர்கள் என்னை அவதூறாக பேசினார்கள். வடக்கு கிழக்கில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் தொடர்பில் பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது. மகாவலி சபையினர் பலாத்காரமாக எமது நிலங்களை அபகரிப்பதால் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.
குருந்தூர் மலை விவகாரத்தில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமைச்சர்களுக்கு இதன் மூலம் போட்டி நிலை உருவாகியுள்ளது.
காரணம் இனவாதத்தை பேசி எவ்வாறு வாக்குகளை பெறமுடியும் என்ற போட்டியே நிலவுகிறது.
சீனாவுக்கு நிலங்களை தாரைவார்த்தபோது வாயை மூடிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எங்கிருந்து வந்தார்கள்.
இது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் நடத்தும் நாடகம் மற்றும் அவர்களுக்கு இடையிலான போட்டி .
வவுனியா வெடுக்குநாரியிலும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது. மதரீதியான பிரச்சினையை உருவாக்கி எதிர்காலத்தில் ஆசனங்களில் அமர திட்டம் தீட்டப்படுகிறது.
தேர்தலில் வெற்றிபெற இந்து - பௌத்த விரோதத்தை உருவிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது.
மீண்டும் அதிகாரத்தில் ஒருவரை அமர்த்துவதற்கான பின்புலம் ஏற்படுத்தப்படுகிறது என்பது தெளிவாக வெளிப்படுகிறது.” என தெரிவித்துளளார்.




