5ஆவது தடவையாக இந்தியாவை எதிர் கொள்ளவுள்ள நியூசிலாந்து
இந்திய (India) மற்றும் நியூசிலாந்து (New Zealand) அணிகளுக்கு இடையிலான ஐசிசி செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (09) இடம்பெறவுள்ளது.
துபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியை இரண்டாவது அரையிறுதியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது.
துடுப்பாட்டத்தை தேர்வு செய்யும் அணி
அந்தவகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கு கொள்ளும் மைதானத்தை பார்த்தால், இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளமே இந்த இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்படும்.
மேலும் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மாலையில் அதிக பனி இல்லை, எனவே அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்யும் அணி ஒரு பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்தால் துரத்துவது கடினமாகிவிடும்.
சிலவேளை, இரவில் பனி அதிகமாக இருப்பின், பந்து கையிலிருந்து வழுக்கும் வாய்ப்பு இருப்பதால் இரண்டாவது துடுப்பாட்டத்தின் போது பந்து வீசுபவர்களும் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.
இதேவேளை, ஐசிசி நொக் அவுட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் 2000 செம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி, 2019 உலகக் கிண்ண அரையிறுதி மற்றும் 2023 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
மறுபுறம், இந்தியா 2024 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்தது.
செம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஓட்டங்கள்
இந்திய அணியில் ரோஹித் சர்மா (அணித் தலைவர்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வொஷிங்டன் சுந்தர் போன்றோர் விளையாடுகின்றனர்.
நியூசிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் மிட்செல் சாண்ட்னர் (அணித் தலைவர்), வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், ஜேக்கப் டஃபி, டெவன் கான்வே, மார்க் சாப்மேன், நாதன் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ரோஹித் சர்மா
இந்தநிலையில், ரோஹித் சர்மாவை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் எழுந்தாலும் டெஸ்ட் செம்பியன்ஷிப் (2023), ஒருநாள் உலகக் கோப்பை (2023), T20 உலகக் கோப்பை (2024) மற்றும் செம்பியன்ஸ் டிராபி (2025) ஆகிய நான்கு ICC போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவராக இவர் காணப்படுகிறார்.
விராட் கோஹ்லி செம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆவதற்கு இன்னும் 46 ஓட்டங்கள் மட்டுமே தேவை. 17 போட்டிகளில் 746 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 791 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற உள்ள போட்டியுடன் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தமது இறுதி ஒருநாள் சர்வதேச போட்டிகளை ஆடலாம் என்று கருதப்படுகிறது.
119 ஒருநாள் போட்டிகள்
இந்த இறுதிப் போட்டியில் கவனிக்கத்தக்க வீரர்களாக: டாம் லாதம் vs ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் vs மிட்செல் சாண்ட்னர், கேன் வில்லியம்சன் vs முகமது ஷமி போன்றோர் உள்ளனர்.
மேலும், இந்தியாவும் நியூசிலாந்தும் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்திய அணி 61 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது,
அதே நேரத்தில் நியூசிலாந்து அணி 50 முறை தோற்கடித்துள்ளது. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள ஏழு ஒருநாள் போட்டிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஆகவே நடைபெற்று முடிந்த அனைத்து ஆட்டங்களையும் வைத்துப் பார்க்கும் போது இரு அணிகளும் வலுவான நிலையில் உள்ளதோடு, வெற்றி தோல்வியை நாணயச்சுழற்சி தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |