விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கும் வரை எங்களின் நம்பிக்கை: பகிரங்கமாக அறிவித்த முக்கியஸ்தர்
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே எமது நம்பிக்கையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணம் அவர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டே கதைத்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்று இலட்சம் தமிழ் பணயக் கைதிகள்
புலிகள் எப்போதுமே யுத்தத்தை பலபடுத்துவதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தினார்கள். புலிகள் சிங்கள மக்களை மட்டும் யுத்தத்தில் கொல்லவில்லை. தமிழ் தலைவர்களையும் கொலை செய்தனர்.
அத்துடன் மூன்று லட்சத்துக்கு மேல் தமிழ் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். அவை மனித உரிமை மீறல்கள்.
இன்று உயிருடன் இருக்கின்ற பன்னிரண்டாயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் கடும் கஷ்டங்களை எதிர்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் கல்வி கற்கவில்லை. சமூகத்தில் அவர்களுக்கு ஒரு சிறந்த அந்தஸ்து கிடைப்பதில்லை. இராணுவத்தினர் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வெளிநாட்டில் சிலர்
சிலர் வெளிநாடு சென்று இருக்கின்றனர். ஆனால் இங்கிருக்கின்றவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை. அரசியல் தீர்வு என்று பேசிக் கொண்டிருக்கின்ற தமிழ் கூட்டமைப்புக்கு இது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு இல்லை.
இந்நிலையில் எப்படியோ இந்தியா பலவந்தமாக தலையிட்டு மாகாண சபை முறைமையை கொடுத்திருக்கிறது. அதனை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாகவே நாம் இப்போது சிந்திக்க வேண்டும்.
காரணம் 13 தாண்டிய எந்த ஒரு தீர்வு திட்டத்திற்கும் இலங்கையில் எந்தவிதமான இடமும் இல்லை சாத்தியமும் இல்லை அதற்கு இந்தியாவும் இடம் அளிக்காது என குறிப்பிட்டுள்ளார்.