இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண காரியாலயத்திற்கு முன்பாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (29) காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கெரவலபிட்டிய மின் நிலையத்தின் 40 வீத பங்கு இறக்குமதி மற்றும் விநியோகத்தின் மீதான ஏகபோகம் அமெரிக்கவிற்கு விற்பனை செய்வதினை கண்டித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஏகபோகம் அமெரிக்காவிற்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில், எதிர்கால மின் உற்பத்தி நிலையங்கள் அமெரிக்காவிற்கு விற்கப்படும், L.N.D பங்குகளை விற்பனை செய்வதினை உடனடியாக நிறுத்து என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசாங்கத்துக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமாக காணப்படுகின்றது. காரணம் இலங்கை மின்சார சபையின் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பகுதிகளில் 40 வீதமான பங்குகளை அமெரிக்க நாட்டிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருகின்றதாகவும், அவ் செயற்றப்பட்டினை கண்டித்து மின்சார சபை ஊழியர்களும் பொதுமக்களும் சேர்ந்து இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தினால் நடு இரவில் கைச்சாத்திடப்பட்ட கெரவலபிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை உடனடியாக நிறுத்துமாறும், அவ்வாறு இவ் ஒப்பந்தத்தினை உடன் நிறுத்தாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இவ்வாறு வெளிநாடுகளுக்கு பங்குகளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களினால் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டு மகஜர் ஒன்றும் தயார்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







