மத்திய வங்கி ஆளுநரின் பெயரைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் அடையாளம், உருவம் மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி மோசடி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாகப் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி மோசடி முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நிதி முதலீட்டு விளம்பரங்கள் மற்றும் காணொளிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்கள் ஊடாக, மத்திய வங்கி ஆளுநர் தோன்றுவதைப் போன்று உருவாக்கப்பட்ட இவ்வாறான மோசடியான விளம்பரங்களும் காணொளிகளும் பரவி வருவது தமது அவதானத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த காணொளிகள் ஊடாக பல்வேறு நிதி ஆலோசனைகள், அதிக இலாபம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல்வேறு நிதி சார்ந்த கருத்துக்களை முன்வைத்து மக்களை ஏமாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, எக்காரணம் கொண்டும் இவ்வாறான விளம்பரங்களை நம்பிச் செயற்பட வேண்டாம் எனவும், இத்தகைய மோசடிகளில் சிக்கித் தங்களது பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மத்திய வங்கி பொதுமக்களைக் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான மக்களைத் திசைதிருப்பும் போலி காணொளிகளை சமூக வலைத்தளங்களில் மேலும் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்கள் அல்லது நிதி ஆலோசனைகளையும் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக மாத்திரம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், "நம்புவதற்கு முன்னர் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்பதை நினைவில் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.