மத்திய வங்கியில் நடந்த மோசடி : மந்தகதியில் விசாரணை
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகிறது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழக்கை இரத்து செய்வதற்கு நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் ஊழல் மோசடியின் பிரதான குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகளில் ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடி அந்த முயற்சியை தோற்கடித்துள்ளார்கள்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான வழக்கை இரத்து செய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |