இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்:வெளியான அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு தனது அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி 50 வீதத்தினால் சம்பளத்தை உயர்த்திய விதம் தவறானது மற்றும் ஒழுக்கமற்றது என்று வெளிப்படுத்தியுள்ளது.
சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன் நாட்டின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
பெரு வங்கிகளின் உயர்மட்ட மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளை ஒரே கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வருவது தவறு எனவும், தனிநபர் அடிப்படையில் கூட்டு ஒப்பந்தத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தம்
அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
தினேஷ் வீரக்கொடி தலைமையிலான இந்தக் குழுவில் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சுதர்மா கருணாரத்ன, நிஹால் பொன்சேகா, அனுஷ்கா எஸ். விஜேசிங்க, அர்ஜுன ஹேரத் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் கே.வி.சி.தில்ரக்ஷி ஆகியோர் அங்கம் வகித்தனர்.
மத்திய வங்கியின் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் நாட்டிலுள்ள ஏனைய ஊழியர்களுக்கு நிகராக இருக்க வேண்டும் எனவும், மத்திய வங்கியில் பணியாற்றியதற்காக அவர்களுக்கு தனியான சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாது எனவும் குழு கூறியுள்ளது.
இதேவேளை,மத்திய வங்கியின் எழுபது வீத சம்பள அதிகரிப்பை அடுத்த வருடம் வரை இடைநிறுத்துவதற்கு குழு பரிந்துரைத்துள்ளதாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியத்தில் மத்திய வங்கி ஊழியர்களுக்கு அதிக வட்டி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை அந்த நிதியத்தால் வழங்கப்பட்ட சலுகைகளை சரி செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |