இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி குறித்த அறிக்கையின் சில பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பிரதிபலன் கிடைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் என சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிநோக்கியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டிருந்ததுடன் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நிதி அமைச்சினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் பல்வேறு கொள்கைச் சீராக்கங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நாணயக் கொள்கையினை இறுக்கமடையச்செய்தல் (2021 ) , செலாவணி வீத நெகிழ்வுத்தன்மையினை அனுமதித்தல், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுதல், எதிர்பார்க்கப்பட்ட வருமானம் அதிகரித்தல் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல், முக்கிய பண்டங்களுக்கு சந்தை அடிப்படையிலமைந்த விலைச் சீராக்கங்களை அனுமதித்தல் ஆகியவற்றை இவை உள்ளடக்குகின்றன.
பன்னாட்டு நாணய நிதியத்துடன் நெருக்கமான ஈடுபாட்டினை இலங்கை அரசாங்கம் நாடுகின்றது
என்பதனை அது எடுத்துக்காட்டுவதற்கிணங்க, அத்தகைய ஈடுபாட்டில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு
இலங்கை மத்திய வங்கி தயாராகவுள்ளது எனவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியானது!




