பதவி விலகுவேன்! மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை! கோட்டாபயவுக்கு மற்றும் ஒரு நெருக்கடி
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாவிட்டால், தாம் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகப்போவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர்; சந்திப்பின்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் நாட்டில் அரசியல் ஸ்திரதன்மை உறுதிப்படுத்தப்படாவிட்டால், பொருளாதாரத்தில் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் மின்சாரத்தடை, எரிபொருள் பற்றாக்குறை போன்றவையும் தீவிரமடையும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாட்டில் அரசியல் ஸ்திரதன்மையை விரைவில் கொண்டு வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மேலும் நீடித்தால், தினமும் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கபடும் என்பதுடன் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மிரிஹான சம்பவத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக கூறிய அவர், ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் இல்லாவிட்டால் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடர முடியாது எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த நிலையில் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி நீக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த நந்தலால் வீரசிங்கவை வரவழைத்து மத்திய வங்கி ஆளுநர் பதவியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.