இலங்கை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போராட்ட அலைகள்
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் அடுத்ததாக எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பிப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் வருமானம் இல்லாத நிலையில், அவர்கள் எதற்கும் துணிவார்கள். இதுபோன்ற போராட்ட அலைகள், இலங்கையில் இதுவரை நடக்கவில்லை என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான கருத்தரங்கின் போது மத்திய வங்கி ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பெற்ற கடன்களுக்கும், அண்மையில் பெற்ற கடன்களுக்கும் வித்தியாசம் உள்ளது, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பான் ஆகியவை 0.2% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கின.
சலுகையற்ற கடன்கள்
எனினும் வணிகக் கடன்கள் உட்பட சலுகையற்ற கடன்கள் 50% வரையில் அதிகரித்துள்ளன. இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் ஒரு கட்டத்தில் கடன் கொடுப்பதை நிறுத்தியவுடன்,இலங்கை நாங்கள் திவாலானது.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கடன் கேட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கிறோம், எங்கள் தவறுகளை சரிசெய்வோம் என்று உறுதியளித்துள்ளோம்.
எனவே வருமானத்தை விட அதிகமான செலவுகள், சலுகைகள் போன்ற பழைய வழிகளுக்கு திரும்ப முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். 2016 மற்றும் 2017களில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை அணுகியது. அதன் பின்னர் நாடு வரி மற்றும் வருமானத்தை அதிகரித்தது.
எனினும் 2019 இல், நிர்வாகம் முடிவுகளை மாற்றியமைத்தது. இதன் காரணமாக வருவாயையும் சந்தைக்கான அணுகலையும் நாடு இழந்தது என்று வீரசிங்க கூறினார்.
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் இலங்கை
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி பெற்று, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை மாற்றியமைத்தால், பொருளாதாரம் மீண்ட பின்னர், மூன்று வருடங்களில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டுக்கான கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தும் முழுப் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. பொதுவாக தேர்தல் நேரத்தில் மக்களிடம் சென்று வரி குறைப்பு, சலுகைகள் போன்ற வாக்குறுதிகளை வழங்குவதுதான் இதுவரை நடந்தது.
மக்களும் அதையே விரும்பி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.பின்விளைவுகளை அறியாமல், இவற்றைச் செய்வதன் மூலம் ஏற்படும் நிலைமை மக்களுக்குத் தெரியாது.
எனினும் இந்த சலுகைகளை பெற்றால், அவர்களே இறுதியில் நெருக்கடி நிலையை எதிர்நோக்க நேரிடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடன்கள் வழங்கப்படாத நிலையில், தற்போதைய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
பணம் அச்சிடல்
எனவே மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு வழங்க வேண்டும் என்று ஆளுநர் கூறினார். . எனவே, இந்தப் பணம் அச்சிடப்பட்டதன் விளைவாக, பணவீக்கம் 60% மற்றும் 70% ஆக உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தின் விளைவுகள் சில காலத்திற்குப் பின்னரே தெரியவரும். இதேவேளை மூன்று மாதங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இலங்கை இறக்குமதி கட்டுப்பாட்டை விதித்துள்ளது என்று வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
அந்த மூன்று நான்கு மாதங்களை கடப்பது இலகுவானதாக இருக்காது, இதனால் பொருளாதாரம் சுருங்குவதைத் தவிர, எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
இலங்கை மக்கள் தாங்க வேண்டிய துன்பம்
எனவே,இலங்கை மக்கள் தாங்க வேண்டிய துன்பம் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார் அத்தகைய நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பது குறித்தும், ஆளுநர் இந்த நிகழ்வின் போது வலியுறுத்தினார்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் அடுத்ததாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம் என்றும், மக்களுக்கு வருமானம் இல்லாதபோது, அவர்கள் எதையும் நாடுவார்கள் என்றும் ஆளுநர் கூறினார்.
குறைந்த வருமானம் பெறுபவர்கள், பிரச்சினையை வீதிக்கு கொண்டு சென்றால், அது இரத்தக்களரியில் முடிவடையும். அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
எனவே
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும், பணவீக்கத்திற்கு ஏற்ப மக்கள் தங்கள்
வருமானத்தை அதிகரிக்க வழியை ஏற்படுத்துவதும் மிக முக்கியமானது. அதுவே
முன்னோக்கி நகர்வதில் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று மத்திய வங்கியின் ஆளுநர்
எச்சரிக்கை விடுத்தார்.