அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது என சிங்கப்பூர் அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனால் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் 10 பில்லியன் ரூபா அளவிலான பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைக்கு புதிய சவால் உருவாகியுள்ளது.
அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடைபெற்றதாகக் கூறப்படும் பிணை முறி மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான முயற்சியை சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொண்டது.
இலங்கையில் பிறந்து சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுக்கொண்ட மகேந்திரன், நல்லாட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்.
கடந்த ஆண்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், 2025 பெப்ரவரி 25ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
மேலும், கொழும்பு நீதவான் நீதிமன்றம் மகேந்திரனை கைது செய்ய இன்டர்போல் (Interpol) மூலம் சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரன் தலைமையில் பிணை முறி மோசடி நடைபெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (Perpetual Treasuries Ltd) நிறுவனமும், அதன் உரிமையாளர் மற்றும் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் என்பவரும் முக்கிய பயனாளிகளாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு திருப்பி அழைத்துவருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதி அளித்திருந்தார்.
தேர்தலுக்கு பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொது பாதுகாப்பு அமைச்சகம் பிணை முறி மோசடிக்கான சட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என அறிவித்தார்.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் காமன்வெல்த் நாடுகள் ஊடாக தப்பிச் சென்ற குற்றவாளிகளை நாடு திரும்பச் செய்யும் திட்டங்கள் உள்ளன.
இருப்பினும், சிங்கப்பூர் சட்டப்படி மகேந்திரனை நாடு கடத்த முடியாது என அந்த நாட்டின் உயர் சட்ட அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.