நடைமுறைக்கு வந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா போர்நிறுத்தம்! எழுந்துள்ள புதிய சர்ச்சை
தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் பல வாரங்களாக நீடித்த மோதல்களைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை(27) நண்பகல் முதல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
சுமார் பத்து லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சீனா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சியால் இந்த அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
ஆளில்லா விமானங்கள்
இருப்பினும், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த அடுத்த நாளே (ஞாயிற்றுக்கிழமை(28) இரவு), கம்போடிய தரப்பிலிருந்து 250-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் (UAVs) எல்லை தாண்டி வந்ததாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கம்போடியாவின் இச்செயல் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிரானது என்றும், இது ஒரு நேரடித் தூண்டல் நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளது.
இதன் காரணமாக, தாய்லாந்து வசம் உள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
ஆனால், இச்சம்பவத்தை ஒரு 'சிறிய விடயம்' என வர்ணித்துள்ள கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சோகோன், ஆளில்லா விமானங்கள் பறப்பது இரு தரப்பிலும் நடக்கும் ஒன்று எனக் கூறியுள்ளார்.
போர்நிறுத்தத்தைப் பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனாவின் கருத்துகளுக்கு மத்தியிலேயே இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது.