பொலிஸ் தடுப்புக்காவலில் 5 ஆண்டுகளில் 79 உயிர்கள் பலி! இனி அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிடிவி
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த 79 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவல் அறையில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவமும் இந்தப் பின்னணியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்படும் சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பாதுகாப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு முறை
இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தடுப்புக்காவல் அறைகளைச் சுற்றி சிசிடிவி பாதுகாப்புக் கெமராக்களைப் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கெமராக்கள் தடுப்புக்காவல் அறைகளின் உட்பகுதிகளைத் தெளிவாகக் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்படவுள்ளன.

தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுதல் அல்லது வேறு முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
அத்துடன், தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பொலிஸ் தடுப்புக்காவல் அறைகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் இந்தக் கண்காணிப்பு முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள் ஊடாக தடுப்புக்காவல் அறைகளுக்குள் சட்டவிரோதப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்கும் இந்தக் கெமரா கட்டமைப்பு உதவியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.