வெளிநாட்டுச் சேமிப்புகள் வீழ்ச்சியடையும்போது ஏற்படும் விளைவு - மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சேமிப்பு முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதபோது என்ன நடக்கும் என்பதை, 2022ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி மிகத் தெளிவாகவும் நடைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளது.
வெளிநாட்டுச் சேமிப்புகள்
வெளிநாட்டுச் சேமிப்புகள் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடையும்போது, அதன் விளைவுகள் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் அல்லது சேமிப்பு முகாமைத்துவப் பொறுப்புகளையும் தாண்டிச் செல்கின்றன.
இறக்குமதி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிறது, நாணய மாற்று விகித அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. பணவீக்க அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். அத்துடன், பொருளாதாரமும் நாடும் மீதான நம்பிக்கையும் சீர்குலைந்து போகலாம்.

2022 நெருக்கடி காலப்பகுதியில் இந்த விளைவுகளை நாம் மிகக் கடினமான அனுபவங்களாக எதிர்கொள்ள நேரிட்டது. முக்கியமானது என்னவென்றால், இருந்த கொள்கை ரீதியான வெளியும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமையாகும்.
பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை
எனவே, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தெளிவாக உள்ளது. போதுமான அளவு வெளிநாட்டுச் சேமிப்பைப் பேணுவது என்பது ஆடம்பரமான விடயமல்ல. அது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையின் அவசியமான அங்கமாகும்.
நடைமுறையில், சேமிப்புகளைத் திரட்டுவது சிக்கலான ஒரு விடயமாகும். ஏனெனில் நல்ல காலங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை, கடினமான காலப்பகுதிகளும் ஏற்படக்கூடும் என்றார்.