முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவாவுக்கு எதிரான வழக்கொன்றின் தீர்ப்புக்கான திகதி நேற்று (05.11.2022) அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா, கடந்த 2013ஆம் ஆண்டுகளில் இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த காலத்தில் அதன் நிதியில் 50 லட்சம் ரூபாவை முறைகேடான வழியில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்.
பணிப்பாளர் சபையின் அனுமதியோ, உரிய வழிமுறைகளையோ கடைப்பிடிக்காத நிலையில் அவர் குறித்த தொகையை நாமல் ராஜபக்சவின் தாருண்யட்ட ஹெடக் அமைப்பின் மூலமாக யோஷித்த ராஜபக்சவின் சீ.எஸ்.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணை
இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா, இலங்கைப் பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் தம்மிக்க பெரேரா மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொனி இப்ராஹீம் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக நீதிபதி அமல் ரணராஜாவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.