முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், விசேஷ செயற்திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் முன்வைத்துள்ளது.
அரசாங்கத்திற்கு இழப்பு
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தன் செல்வாக்கிற்கு உட்படுத்தி அரசாங்கத்தால் 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை 2014ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்.எம். சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த ஜூலை 4 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவடைந்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர் மீது உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான், சந்தேக நபரை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சந்தேக நபர் இன்று (28) திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.