வழக்கு ஏட்டைத் திருடியவருக்கு விளக்கமறியல் : மற்றுமொருவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை (Case Record) திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(02.06.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலம் தொடர்பான வழக்கு
இச்சம்பவம் தொடர்பில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராண, சம்பந்தப்பட்ட வழக்கு ஏட்டினை மாவட்ட நீதிமன்ற பதிவாளரின் (Registrar) நேரடி கண்காணிப்பில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கும் நீதிமன்ற பதிவாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பதிவாளரைப் பழிவாங்கும் நோக்கில் சந்தேக நபர் அந்த வழக்கு பதிவு ஏட்டினைத் திருடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நீதிமன்ற தட்டச்சரான (Typist) 30 வயதுடைய பெண்ணை 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த பெண்ணுக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri