மட்டக்களப்பு பள்ளிவாசலுக்குச் சொந்தமான மரத்தினை வெட்டிய வழக்கு விசாரணை
மட்டக்களப்பு (Batticaloa) ஜாமிஉஸ் ஸலாம் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பான அடிப்படை உரிமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று நீதியரசர்களடங்கிய உச்ச நீதிமன்றத்தில் பிரதிவாதிகளான வீதிப் போக்குவரத்து அதிகார சபைக்காக தோன்றிய சிரேஷ்ட அரச சட்டத்தரணி பிரதிவாதிகளிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்கள் பெற வேண்டி இருப்பதாகக் குறிப்பிட்டு ஆதரிப்பிற்கு வேறு ஒரு திகதியைக் கோரியுள்ளனர்.
வழக்கு விசாரணை
இந்த நிலையில், வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் கிழக்கு மாகாண நிறைவேற்றுப் பொறியியலாளரால் கடந்த 14ஆம் திகதி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இன்று (22) நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், மரம் அமைந்துள்ள வாகனத்தரப்பிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூச்சாடிகளையும் இதர மரங்களையும் மே மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறும், அவை அகற்றப்படாவிடின் தேசிய நெடுஞ்சாலைகள் (National Thoroughfares) சட்டத்தின் கீழ் தான் அகற்றப் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்காலத் தடை ஒன்று இல்லாவிட்டால் பிரதி வாதிகள் குறிப்பிட்ட இடத்தில் அத்துமீற வாய்ப்பிருக்கிறது என தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய அரச சட்டத்தரணி அடுத்த திகதியில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை பிரதிவாதிகள் இருப்பதை இருக்கின்றவாறே பேணுவதாக (Status Quo) நீதிமன்றிற்கு உத்தரவாதமொன்றை வழங்கியுள்ளார்.
அந்த உத்தரவாதமானது நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி அன்ஞன, சட்டத்தரணி றாஸி முஹம்மத் ஆகியோரோடு அறிவுறுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி றுடானி ஸாஹிரும் பிரசன்னமாகி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |