கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு எதிராக ஏன் நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இருபது பக்கங்களைக் கொண்ட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு, கர்தினால் அனுப்பி வைத்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்படுவது குறித்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டது யார், யார் அதனை மேற்கொண்டார்கள், ஏன் தடுக்கப்படவில்லை என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளது.
2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஏன் அரசாங்கம் இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமைகளை செய்யத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் நடவடிக்ககைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்க வேண்டியது அவசியமானது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.