'“எதிர்கால ஆட்சி ஒன்றில் நீதி வெல்லும்” எதிர்பார்க்கும் கர்தினால்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக, கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீண்டும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், காவல்துறை மற்றும் அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை அரசாங்கம் மறைக்கிறது என்பது வெளிப்படையானது என்று குற்றம் சுமத்தினார்.
கத்தோலிக்க சமூகம் தற்போது அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்கள் இடம்பெறும் என்று உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது.
இதற்கான அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன.
இந்த விடயம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது என்று கர்தினால் தெரிவிததார்.
அரசாங்கமும், சட்டமா அதிபரி திணைக்களமும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்களை மறைத்துவிட்டதாக கர்தினால் குற்றம் சுமத்தினார்.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளை எழுத்துப்பூர்வமாகக் கோரியபோதும், இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கமும் அதனை மறைத்துவிட்டதாக கர்தினால் தெரிவித்தார்.
நீதியை எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்டவர்
------------------------------------------------
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் கர்தினால் குறிப்பிட்டார். சஹ்ரான் ஹாசிமுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், அவை சரியாக செய்யப்படுகின்றனவா என்பது தெரியவில்லை." இந்தத் தாக்குதல் நடக்கும் என்பதை அறிந்திருந்த மூத்த புலனாய்வு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்து, பதவி உயர்வு வழங்கி, நீதித்துறை நடைமுறையை இந்த அரசாங்கம் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று கர்தினால் குற்றம் சுமத்தினார்.
எனவே எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் ஒரு அரசாங்கத்தின் கீழ் நீதி வெல்லும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



