நீதியின் போராட்டத்தில் கொல்லப்பட்டாலும் போராடுவோம்: கா்தினால் மல்கம் ரஞ்சித் எச்சாிக்கை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு பிாிவுகளில் இருந்தவர்கள் உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னறிவிப்புகளை பெற்றபோதும், தமது பாதுகாப்பை மாத்திரமே உறுதிப்படுத்த முயன்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளாா்
உயிா்த்த ஞாயிறு படுகொலையின் போது தனது முழு குடும்ப உறுப்பினர்களையும் இழந்த கடுவாப்பிட்டியை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரின் வீட்டிற்குச் சென்ற கர்தினால் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்புப்பிரிவும் கடமை தவறியதாக குற்றம் சுமத்தியுள்ளாா்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரவில் இருந்த ஏனையவர்கள், அவர்களுக்குள் கடிதங்களை மட்டுமே பரிமாறிக்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
இவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம், அதை இதுவரை செய்யவில்லை.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்காக 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
எனினும் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமையால் இந்த நிதி பயனற்றுப்போயுள்ளதாக கர்தினால் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு தாக்குதல்கள் பற்றி முன்னரே தெரிந்திருந்தது என்று தாம் உணர்வதாகவும் கா்தினால் இதன்போது குறிப்பிட்டுள்ளாா்.
எனவே தம்மில் சிலர் சந்தேகங்களை வெளியிடும்போது, அதற்காக அவா்களை குற்றப்புலனாய்வு பிாிவில் முன்னிலையாக கூறுவது அல்லது தமக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படுவது நியாயமான விடயம் அல்ல என்றும் கா்தினால் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தநிலையில் உயா்த்த ஞாயிறு கலவரத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணரும் செயல்பாட்டில் தாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடப்போவதாக கா்தினால் எச்சாித்துள்ளாா்..