பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வேட்பாளர் தெரிவுக்காக வவுனியாவில் கூடிய தமிழரசு கட்சி
நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று (05) கூடியுள்ளது.
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.
இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.
களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள்
இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ககப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாவட்ட ரீதியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனக் குழு கூடியமை மாவட்ட மட்டத்தில் பலரிடத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் எந்தவொரு மத்தியக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒருவர். மத்தியக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஒருவர் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளலாமா என்கின்ற கேள்வியையும் சந்தேகத்தையும் பலரிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாது இன்றுள்ள சூழ்நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் உள்ளக குழப்பங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்கின்ற போது மாவட்ட ரீதியில் எதிர்பார்க்கப்படுகின்ற பலரது பெயர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |