கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் ரவிகரன் சந்திப்பு (PHOTOS)
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களுக்கு ரவிகரனால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இலங்கையின் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் சமகாலத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டது.
குறிப்பாக கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், குறித்த விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு இருக்கவேண்டும் எனவும் ரவிகரனால் இதன்போது கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தப்பட்டது.
அத்தோடு இம்மாதம் 14ஆம் திகதி, வெள்ளிக்கிழமையன்று தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும், அங்கு வழிபாடுகளுக்கென சென்ற தமிழ்மக்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு குருந்தூர்மலையில் சைவ வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்ற நீதிமன்றக்கட்டளையின் பிரதி மற்றும், கடந்த 14ஆம் திகதி குருந்தூர்மலையில் சைவ வழிபாடுகள் மறுக்கப்பட்டமை தொடர்பிலும், ஊடக அடக்குமுறை இடம்பெற்றமை தொடர்பிலும், மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுப் பிரதி என்பனவும் இதன்போது கனேடிய உயர்ஸ்தானிகரிடம் ரவிகரானால் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சந்திப்பின்போது தன்னிடம் முறையிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக இதன்போது கனடேிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் உறுதியளித்திருந்தார்.
மேலும் இச்சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் ஆகியோரும் கலந்துகொண்டு சமகாலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




