கனேடிய பொது தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்கள்
எதிர்வரும் ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தல் களத்தில், மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும், இருவர் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பிலும் களமிறங்குகின்றனர்.
இந்த இரு கட்சிகளும் கனடாவின் மத்திய மற்றும் மாகாண அரசியலில் மாறி மாறி ஆட்சி புரியும் பிரதான அரசியல் கட்சிகளாக திகழ்கின்றன.
தமிழ் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகள்
கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய கரி ஆனந்தசங்கரி ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அத்துடன், மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினராக பணியாற்றும் ஜுவொனிற்றா நாதன், புதிய முகமாக மார்க்கம் பிக்கரிங்-புரூக்ளின் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்குகிறார்.
மேலும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியில் லைனல் லோகநாதன் போட்டியிடுகிறார்.
முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன், அதே கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மார்க்கம்-ஸ்டோஃப்வில் தொகுதியில் நிற்கிறார்.
வெற்றி வாய்ப்புகள் மற்றும் சவால்கள்
இந்த நான்கு தமிழ் வேட்பாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும், தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வெற்றி பெறுவதற்கு வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
கரி ஆனந்தசங்கரிக்கு நீதி அமைச்சர் பதவி
நான்காவது முறையாக தேர்தலில் போட்டியிடும் கரி ஆனந்தசங்கரி, இதற்கு முன் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அனுபவம் கொண்டவர்.
லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், அவருக்கு நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் பதவிகள் வழங்கப்படும் என கட்சியின் தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியல் செல்வாக்கு
கனடாவின் பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் பங்கேற்பது, தமிழ் சமூகத்தின் அரசியல் செல்வாக்கை பிரதிபலிக்கிறது.
லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை கனடாவின் மிகப்பெரிய அரசியல் சக சக்திகளாக இருப்பதால், இந்த தேர்தல் தமிழர்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |