கனடா பிரிவினைவாதம்: பழங்குடியினத் தலைவர்கள் கவலை
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைப் பிரித்து தனி நாடாக்கக் கோரும் பிரிவினைவாத இயக்கம் குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் கனடிய பழங்குடியினத் தலைவர்களின் குழு மன்னரைச் சந்தித்தபோது, இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பழங்குடியின மக்களுக்கும் பிரித்தானிய முடியாட்சிக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களுக்கு இந்தப் பிரிவினைவாத முயற்சி பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை தலைவர்கள் மன்னரிடம் சுட்டிக்காட்டினர்.
கவலை
இதைக் கேட்ட மன்னர், இது குறித்துத் தான் மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவதாகவும், இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள சமூகப் பிளவுகள் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணம் பிரிந்து தனி நாடாவதன் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என 'ஆல்பர்ட்டா ப்ரோஸ்பெரிட்டி புராஜெக்ட்' என்ற அமைப்பு வாதிட்டு வருகிறது.

இதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி சுமார் ஒரு இலட்சத்து 77 ஆயிரம் பேரிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இருப்பினும், பழங்குடியின மக்களின் சம்மதம் இன்றி இத்தகைய பிரிவினை நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது எனப் பழங்குடியினத் தலைவர்கள் வாதிடுகின்றனர்.
வழக்கு
இது தொடர்பாக ஆல்பர்ட்டா மாகாண அரசுக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்தச் சூழலில், கனடியப் பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் லண்டனில் மன்னர் சார்லஸைச் சந்திக்கவுள்ளார்.

அப்போது இந்தப் பிரிவினைவாதப் போக்கு மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினை ஆல்பர்ட்டா மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பழங்குடியினத் தலைவர்களின் இந்த லண்டன் விஜயம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.