ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்க வேண்டும், வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்களைத் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி வரும் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்(Gnanamuthu Srineshan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்குத் தேர்தல் மூலமாக அவர்களது கருத்துக்களை, எண்ணங்களைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது.
அடிப்படைவாத உணர்வு
அந்தவகையில் தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன விபரீதம் இடம்பெறும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவும் மகிந்த ராசபக்ச போட்டியிட்டனர். அந்தவேளையில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது, தமிழர்கள் இம்முறை தமது வாக்களிப்பைக் புறக்கணிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது.
இதன் விளைவாக மிக மோசமான அடிப்படைவாத உணர்வுடைய மகிந்த ராசபக்ச வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதால் தமிழர்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவித்தார்கள்.
அடுத்ததாக, தமிழர்களும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒரு பொதுவான முடிவுக்கு வர வேண்டாம். ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கும், பிரதானமாகப் பேசப்படும் அநுரகுமார திசாநாயக்க , சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மூவரும் தமிழர்களுக்கு எதையும் வழங்கக்கூடிய எண்ணம் உடையவர்களாகக் காணப்படவில்லை.
கடந்த 75 ஆண்டுகளாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இன்று நாங்கள் சிங்கள வேட்பாளர்களை நம்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுவாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |