தனிமைப்படுத்தப்பட்டோரைக் கண்காணித்தால் மேலும் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்! ஆ.கேதீஸ்வரன்
யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் மேலும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ,கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. எனினும், இம்மாதம் மருதனார்மடம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பின்னர் நிலைமை சற்று வேகமாக அதிகரித்துச் செல்கின்றது.
நேற்று வரை 106 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு 102 பேர் இந்த மருதனார்மடம் கொத்தணியோடு சம்பந்தப்பட்டு தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். நேற்று 9 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தார்கள்.
நாம் தொடர்ச்சியாக எழுமாற்றாக சில பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதில் ஒரு கட்டமாகத்தான் ஓட்டோ சாரதிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அவர்களில் ஒருவருக்குத் தொற்று காணப்பட்டது.அதன் பின்னர் குறித்த சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் சந்தையுடன் தொடர்புபட்ட பொதுமக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வருகின்றோம்.
அதில் ஒரு விடயம் என்னவென்றால் குறித்த சந்தைக்கு விஜயம் மேற்கொண்டு வியாபார பொருட்கள் வாங்க வந்த ஒருவரின் குடும்பத்தார் அனைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு தற்போது ஏனைய சந்தைகளிலும் குறித்த தொற்று பரவாமல் இருப்பதற்காக அனைத்து சந்தைகளையும் மூடி வைத்திருக்கின்றோம். ஏனைய சந்தைகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் சங்கானை சந்தைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.எனினும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக அனைத்து சந்தைகளையும் தற்காலிகமாக மூடி வைத்து இருக்கின்றோம்.
அத்தோடு சந்தை வியாபாரிகள் மட்டுமல்லாது சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்கள் தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.நாங்கள் ஒரு பிரதேசத்தை முடக்கினால் அந்த பிரதேசத்தில் உள்நுழையும் பகுதிகளில் மாத்திரம் வீதித்தடைகளைப் போடுவோம்.
ஆனால், உள்ளே உள்ளவர்கள் அனைவருடனும் பழகுவார்கள் தமது அன்றாடச் செயற்பாட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு ஏற்படும் போது அங்கே உள்ள அனைவருக்கும் தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படும்.
இதன் காரணமாகத் தான் முடக்கல் நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.இதற்கு தனிமைப்படுத்தலே சரியான வழியாகும்.
எனினும், தனிமைப்படுத்தி உள்ளோர் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.