குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா? வவுனியாவில் போராட்டம்
இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை. எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை.
எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். சர்வதேச நீதியை நம்பியே நாம் போராடி வருகிறோம்.
எனினும், ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதி தொடர்பாக எந்த பலன்களும் கிடைக்கவில்லை.
நாங்கள் இழப்பீட்டிற்கான அலுவலகத்தையோ, காணாமல்போன அலுவலகத்தையோ கோரி போராட்டம் நடாத்தவில்லை. இதேவேளை குற்றம் செய்த குற்றவாளிகளிடம் நீதி கிடைக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.
அந்தவகையில் , இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயமாகவே இருக்கிறது.
எனவே எமது துன்பங்களை தீர்த்து வைப்பதற்கான சர்வதேச நீதியை எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம். என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே,தமிழ்க்குழந்தைகளும் பயங்கரவாதிகளா, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, அரசின் பொறுப்பற்ற பதில்களை கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam