கொழும்பு துறைமுக நகரை உன்னிப்பாக அவதானித்து வரும் அமெரிக்கா! தூதுவர் ஹெலைய்னா
இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலத்தில் உள்ள சில விடயங்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலைய்னா பீ. டெப்லிட்ஸ் (Helina Bee. Teplits) தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடிந்த நபர்கள், சட்டவிரோத நிதி நடவடிக்கைகள் மற்றும் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கல்வி நிலையம் ஒன்றுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். இலங்கையில் முதலீடு செய்ய எண்ணும் அமெரிக்க நிறுவனங்கள் தாம் முதலீடு செய்ய போகும் சூழல் குறித்து தெளிவான புரிதல் இருப்பது அத்தியாவசியம். அவர்கள் முதலீடு செய்யும் முகவர் நிறுவனங்களின் பங்குதாரர்கள், அதன் பணிப்பாளர் சபைகளுடன் தமக்கு பிரச்சினை ஏற்படுமா என்பது மாத்திரமல்ல ஆபத்தை எதிர்நோக்க நேரிடுமா என்பது அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வர்த்தகம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக வெளிநாட்டு அதிகாரி ஒருவருக்கு பணத்தை செலுத்துவதாக உறுதியளிப்பது அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் சட்டத்தின் படி சட்டவிரோத நடவடிக்கையாகும் எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான மிகப்பெரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அபிவிருத்தித் திட்டத்திற்காக சட்டம் மற்றும் விதி முறைகளை உரிய முறையில் உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் அநீதியான போட்டிகளுக்காக கதவு திறக்கப்படவில்லை என்பதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியமானது எனவும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.