ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து சேகரிப்பு
ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி 50 இலட்சம் பேரிடம் கையெழுத்து சேகரிக்கும் பிரசாரம் நேற்று (26) மிஹிந்தலை புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவித்திருந்தார்.

இருப்பினும், அந்தப் பொதுமன்னிப்பு சட்டப்படி செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலமாக இன்னொரு ஜனாதிபதி பொதுமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள ஞானசார தேரர் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே மிஹிந்தலை விகாராதிபதி தலைமையில் பொதுமக்களின் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் கையெழுத்துகளுடன் கூடிய மனுவை மகாநாயக்க தேரர்கள் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.