ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக குற்றச்சாட்டு! மறுக்கும் ஒளிப்பதிவாளர்
தனியார் ஊடகமொன்றின் ஒளிப்பதிவாளர் , கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
தாம் அந்த பாதுகாப்பு அதிகாரியை வேண்டுமென்றே தாக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிணையில் செல்ல அனுமதி
பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சரித் நியோமல்,
தாம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை இதற்கு முன்னர் செய்தியாக பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய போது, தாம் அதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்போது ஒரு கையில் கெமராவையும் மற்றொரு கையில் கையடக்கத் தொலைபேசியையும் வைத்திருந்ததாகவும், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தன்னை தள்ளியதாகவும் அவர் கூறினார்.
“நான் கீழே விழும் நிலையில் இருந்தபோது, என்னிடமிருந்த கெமராவும் கீழே விழும் நிலையில் இருந்தது. அதனை பிடிப்பதற்கு நான் முயற்சித்தேன். பின்னர் சமூக ஊடகங்களில் நான் அவரை தாக்கியதாக செய்திகள் வெளியானதை பார்த்தேன்” என அவர் தெரிவித்தார்.
தன்னை கெமராவால் தாக்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் கேள்விக்குட்படுத்தினார்.
நீதிமன்ற நடவடிக்கை
தன்னுடைய கெமராவின் பெறுமதி 8 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனவும், அதில் மிகவும் உணர்திறன் வாய்ந்த பாகங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“குற்றச்சாட்டில் கூறப்படுவது போன்று நான் அவரை கெமராவால் தாக்கியிருந்தால், எனது கெமரா சேதமடைந்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். “இந்தக் குற்றச்சாட்டை நான் வன்மையாக நிராகரிக்கிறேன். நான் எந்த விதத்திலும் யாரையும் தாக்கவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பாதுகாப்பு அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான சரித் நியோமல் கைது செய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.