சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, வடக்கு, கிழக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி பாரிய பேரணியொன்றை முன்னெடுப்படுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், சிவில் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து செயற்பட வேண்டும் என சிவில் செயற்பாட்டாளர் இருதயம் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(10.01.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்படவுள்ள கோரிக்கைகள்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 04.02.2026 அன்று இலங்கையின் சுதந்திர தினம், தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள்.

அந்த நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, வருகின்ற 04.02.2026 அன்றைய நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடத்தும் பேரணியானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும், தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
அதேப்போன்று, தமிழ் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான நிரந்தர பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும், இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தில் பல்வேறு வகையில் பௌத்த விகாரைகளை நிறுவிய, தொல்பொருள் திணைக்களத்தின் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

அத்துடன், “பயங்கரவாதத் தடைச்சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தி, நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இன அழிப்பை நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், வடக்கு, கிழக்கு இணைந்ந தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.