இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விசேட அமைச்சரவை குழு
இலங்கை கிரிக்கட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வுகாண விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று (06.11.2023) நடைபெற்ற கூட்டத்தில் குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அதன் உறுப்பினர்களாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கான பரிந்துரைகளை செய்வதே இந்த உபகுழுவின் பொறுப்பாகும்.
உப குழு நடவடிக்கை
முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கும், குறித்த தரப்பினருடன் இணக்கமாக செயற்படவும் அமைச்சரவை உப குழு நடவடிக்கை எடுக்கும் என அறியமுடிகிறது.
இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் செயலாளரால் பெயர் குறிப்பிடப்படும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவர், இந்த உப குழுவின் செயலாளர், இணைப்பாளராகச் செயல்படுவார் என கூறப்படுகிறது.
இந்த நியமனத்தின் நோக்கம், குழுவின் பணிகளை செயற்திறன்மிக்க வகையில் ஒருங்கிணைப்பு செய்வதை எளிதாக்குவதாகும்.
மேலும், இந்தக் குழுவின் கலந்துரையாடலுக்கு அவசியம் எனக் கருதும் எந்தவொரு அதிகாரி அல்லது குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள இந்த உப குழுவுக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த உப குழுவை நியமிப்பதற்கான நோக்கம், இலங்கை கிரிக்கெட்டில் உள்ள பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்குத் தேவையான நிபுணர் அறிவைப் பெற்று அதை பரந்த அளவில் பரிசீலிப்பதாகும்.