400 மைதானங்களை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி
மாணவர்களின் விளையாட்டுப் பங்கேற்பை அதிகரிக்கவும், அவர்களின் உடல், சமூக மற்றும் மனநலனை மேம்படுத்தவும் நாடு முழுவதிலும் உள்ள அரச பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் பாரிய திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சராகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த இந்தப் பிரேரணைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
விளையாட்டு மைதானங்கள்
இலங்கையிலுள்ள 10,096 அரச பாடசாலைகளில் வெறும் 5% பாடசாலைகளில் மட்டுமே தரமான அளவிலான விளையாட்டு மைதானங்கள் காணப்படுகின்றன.
பரீட்சையை மையப்படுத்திய கல்வி முறை மற்றும் போதிய வசதிகள் இல்லாமை காரணமாக மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் குறைவடைந்துள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான வீரர்களை அடையாளம் காண்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி வலயத்திலும் 400 மீற்றர் ஓடுதளத்தைக் (Running Track) கொண்ட ஒரு தரமான மைதானத்தையாவது உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் 2026 முதல் 2029 வரை நான்கு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
செலவு
இதற்காக 2010.50 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் பாடசாலைகள்: 25 மாவட்டங்களிலும் தலா ஒரு தேசிய பாடசாலை மற்றும் மூன்று மாகாண பாடசாலைகள் வீதம், நான்கு ஆண்டுகளில் மொத்தம் 400 பாடசாலைகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும்.