விடுதலைப்புலிகளின் தலைவர் யார் என கேட்கக்கூடிய நிலை வரும் : சிவஞானம் விசனம் (Photos)
இன்னும் பத்து வருடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் யார் என கேட்கக்கூடிய நிலை தான் இங்கு காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்தப்படும் "கார்த்திகை வாசம்" மலர்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்னும் பத்து வருடங்களில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் யார் என கேட்கக்கூடிய நிலைமை தான் இங்கு காணப்படுகின்றது. எங்கள் மக்களிடத்தில் மறதி என்கின்ற பண்பு வளர்ந்து வருகின்றது.
இதன் காரணமாக மக்கள் பழைய விடயங்களை மறக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
குறிப்பாக ஐங்கரநேசன் என்பவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வோடு நீண்ட காலமாக பயணித்து வருபவரினால் இந்த மர நடுகை மாதம் ஆண்டுதோறும் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போது மாற்றமடைந்த நிலை
மாகாண சபை செயற்பாட்டில் இருந்தபோது ஐங்கரன் விவசாய அமைச்சராக இருந்தபோது இந்த கார்த்திகை மாதத்தினை மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
எனவே மாகாண சபையின் அவைத்தலைவர் என்ற ரீதியில் அந்த தீர்மான நிறைவேற்றியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. ஆகவே எனக்கு அதில் ஒரு சந்தோஷம் உள்ளது அதாவது இந்த மரநடுகை மாதத்தை தீர்மானமாக நிறைவேற்றியதில் நானும் பங்காற்றி இருக்கின்றேன்.
ஆனால் மாகாண சபை செயற்பாட்டில் இருந்த காலத்தில் இந்த செயற்திட்டமானது வடக்கு மாகாணத்தில் எல்லா மாவட்டத்திலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறிவிட்டது.
மரநடுகை தற்பொழுது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சமூக அரசியற் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |