வர்த்தகர் ஒருவரை ஏமாற்றி 28 கோடி ரூபாய் கொள்ளை! பொலிசார் விசாரணை
தங்கக்கட்டிகளை விற்பனை செய்வதாக வர்த்தகர் ஒருவரை ஏமாற்றி 28 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் கொழும்பில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
28 கோடி ரூபாய் கொள்ளை
கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரைத் தொடர்பு கொண்ட லண்டனில் வாழும் இலங்கையர் ஒருவர், தனக்குத்தெரிந்த நபர்களிடம் 5.5 கிலோ கிராம் எடை கொண்ட சுத்தமான தங்கம் இருப்பதாகவும் அவர்கள் விற்பனை செய்ய பொருத்தமான ஆள் தேடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர் 5.5 கிலோ தங்கத்தை 28 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பேசி முடிவாகியுள்ளது.
தங்கத்தை விற்பனை செய்வதாக தெரிவித்த நபர்கள் , அதனை வாங்க சம்மதித்த வர்த்தகரையும் அவரது புதல்வரையும் மாத்திரம் இன்னோர் இடத்துக்கு தனியாக கூட்டிச் சென்று கை, கால்களை கட்டி அடித்து உதைத்து அவர்களிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து அங்கிருந்து தப்பி வந்த வர்த்தகரும் அவரது புதல்வரும் மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எனினும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற நால்வர் தலைமறைவாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.