அரசியல் களத்தில் குதிக்கிறாரா கந்தையா பாஸ்கரன்! காலம் பதில் சொல்லும்..
தாம் நேரடியாக அரசியலில் களமிறங்குவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என்று தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கட்சிகள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தான் நீண்டகாலமாக அரசியலை அவதானித்து வருவதாகவும், அரசியல்வாதிகள் மீதான அதிருப்தி மற்றும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தன்னைச் சிந்திக்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டிலிருந்தே தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்த அவர், அதனைத் தானே தலைமை தாங்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும், மக்களை நேசிக்கும், நேர்மையான, இளைஞர்களை ஒன்றிணைக்கும் திறனுள்ள தலைமை ஒன்றைத் தேடி வந்ததாகவும் கூறினார்.
தமிழ் அரசியல் தற்போது உரிமை அரசியலிலிருந்து சலுகை அரசியலுக்கு மாறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் தனிப்பட்ட சலுகைகள் மற்றும் நலன்களுக்காகச் செயற்படுவதாகவும் விமர்சித்தார்.
மேலும், தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையும் தெளிவான திட்டமிடலும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர்,
கடந்த 17 ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். தற்போதைய அரசியல் தலைமைகள் தங்களது காலப்பகுதியில் என்ன செய்துள்ளன என்பதை மக்கள் மதிப்பிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.
புதிய அரசியல் மாற்றம்
புதிய அரசியல் மாற்றம் என்பது பழைய முகங்களுக்குப் பதிலாகப் புதிய முகங்களைக் கொண்டுவருவது மட்டுமல்ல எனத் தெரிவித்த அவர், அடுத்த 50 ஆண்டுகளுக்கான தெளிவான கொள்கை, திட்டமிடல் மற்றும் வலுவான நிறுவனக் கட்டமைப்பைக் கொண்ட அரசியல் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்குத் தயாராக இருந்தாலும், அவர்களை வழிநடத்த நேர்மையான தலைமை அவசியம் என்றும் குறிப்பிட்டார். அதேவேளை, முன்னாள் போராளிகள், மாவீரர்கள் மற்றும் தேசிய அடையாளங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
தியாகங்களைப் பேசுவதுடன் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், விதவைகள் மற்றும் தனித்து குடும்பங்களை நடத்தும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்காகத் தரவுகளைத் திரட்டுதல், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதல், வங்கிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுதல் போன்றவை அவசியம் எனவும், தனிநபரின் உதவியால் மட்டுமே இவ்வாறான நீண்டகாலத் தீர்வுகளை உருவாக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். இவை வெறுமனே அபிவிருத்தி அல்லது மேய்ச்சல் நிலப் பிரச்சினைகள் அல்ல; தமிழ் மக்களின் நில உரிமையுடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், போர்க்காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பான பொறுப்புக்கூறல், கல்வி, பொருளாதாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை ஆகியவற்றில் வடக்கு, கிழக்கின் வளர்ச்சி குறித்து அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் பிரவேசம்
பிரதேசத்தின் வளங்களை அடிப்படையாகக் கொண்ட தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
தான் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கந்தையா பாஸ்கரன், மக்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
தனக்கு பல்வேறு தொழில் முயற்சிகளும் குடும்பப் பொறுப்புகளும் இருப்பதால் அரசியலில் இறங்குவது என்பது சாதாரணமான முடிவல்ல என்றும் தெரிவித்தார்.

தனது சமூக வலைத்தளப் பதிவுகள் விவசாயம் மற்றும் தொழில் முயற்சிகள் சார்ந்த உள்ளடக்கங்களிலிருந்து அரசியல் கருத்துகளுக்கு மாறிவருவது அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறியா என்ற கேள்விக்கும் பதிலளித்த அவர்,அதனை அவ்வாறும் பார்க்கலாம் எனக் குறிப்பிட்டார்.
எனினும், தான் அரசியலுக்கு வருவதாகவோ அல்லது வரப்போவதில்லை என்றோ இதுவரை முடிவெடுக்கவில்லை என்றும், அதற்கான பதிலை காலமே தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri