கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வர்த்தகர் மரணத்தில் திடீர் திருப்பம்! அறையில் சிக்கிய பொருட்கள்
தலங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் வாகனத்தை விட்டு தப்பிச்சென்ற தம்பதியினர் இந்தோனேசியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கம, பெலவத்த பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் குளியல் தொட்டியில் சடலமொன்று இருப்பதாக நேற்று (02) பிற்பகல் தலங்கம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்போது கிட்டம்பஹுவ, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ரொஷான் வன்னிநாயக்க என்பவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
தொழிலதிபர் தலையில் அடித்து குளியல் தொட்டிக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த வீட்டிற்குள் சோதனை நடத்தியதில், பல இரத்தக்கறைகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது அறையில் கண்டெடுக்கப்பட்ட சிட்டொன்றில் களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டமையும் கண்டுபிடிக்ப்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணை நடத்திய மேற்கு தெற்கு குற்றப்பிரிவுபொலிஸார், மருந்தகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 3.22 மணியளவில் மருந்துகளை கொள்வனவு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த வெள்ளை நிற காரில் தொழிலதிபர் வேறொரு நபருடன் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலிருந்து தப்பிச்சென்ற தம்பதியினர்
இதன்படி, கார் பயணித்த சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த பொலிஸார், வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் காரில் திரும்பி மற்றுமொரு பெண்ணை காரில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் இருவரும் கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் உயிரிழந்த வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சில பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், தொழிலதிபரின் கிரெடிட் கார்டு மூலம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி, இந்தோனேஷியா செல்வதற்காக இரண்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர்.அதன்படி இருவரும் இந்தோனேஷியா தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகரின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்று நடத்தப்படவிருந்த நிலையில், உடல் வீங்கியிருந்தமையினால் உறவினர்களால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சடலத்தின் பிரேதப் பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தப்படவுள்ளதாகவும், சடலம் குறித்த நபருடையது தானா என்பதை உறுதிப்படுத்துவதற்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.