யாழ். நகரப் பகுதி பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரம் : பிமலிடம் முன்வைக்கப்பட்ட கருத்து
யாழ். நகரப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்து தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ். நகரை அபிவிருத்தி செய்வதாயின் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை இலங்கையில் தனித்துவமான சேவையை வழங்கி வரும் நிலையில் யாழ்ப்பாண பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நாமும் தனித்துவமான சேவையை வழங்கி வருகிறோம்.
கோரிக்கை முன்வைக்கப்படவில்லை..
நாங்கள் யாரிடமும் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்காத நிலையில் புதிய பேருந்து நிலையம் ஒன்றில் தனியாருடன் இணைந்து நெடுந்தூர போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நாம் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய நிலையில் அந்தக் கோரிக்கையை ஏற்க மாட்டோம் என முடிவு எட்டப்பட்டது என்றார்.
இதன் போது பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், யாழ். நகரத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தரிப்பிடத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எனது கோரிக்கை அல்ல அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து, கருத்து தெரிவித்த துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடக்கு போக்குவரத்து துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள இளங்குமரன் எம்பி தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.



