டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கைது
திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால் டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (12) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிப்பு
கண்டியிலிருந்து உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்துகள், கந்தளாய் போட்டான்காட்டு சந்தியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.