கொழும்பில் இருந்து சென்ற பேருந்து சாரதியின் மோசமான செயல் - வாழ்நாள் தடை விதித்த நீதிமன்றம்
கொழும்பில் இருந்து பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஆயுள் முழுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சாரதிக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி செல்லும் இலக்கம் 05 வழித்தடப் பேருந்தை குறித்த சாரதி செலுத்திச் சென்றுள்ளார்.
வாழ்நாள் தடை
இதன்போது, சங்கராஜ மாவத்தையில் கடமையிலிருந்த மருதானை பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் சோதனைக்காக பேருந்தை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாது பேருந்தைத் தொடர்ந்து செலுத்தியுள்ளார். அதிகாரிகள் பேருந்தை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாரதி மதுபோதையில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய குறித்த சந்தேகநபர், புதுக்கடை இலக்கம் 07 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாரதிக்கு 35,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆயுள் முழுவதும் இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.