யாழில் போதையில் பேருந்தை இயக்கி விபத்து: சாரதி கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம்(30.10.2026) பயணிகளை ஏற்றி சென்ற இலங்கை போக்குவரத்து பேருந்தும் , முச்சக்கர வண்டியொன்றும், யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் அராலி சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் பின்னால் சென்று மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் , முச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
பொலிஸார் நடவடிக்கை
அதனை தொடர்ந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்து சாரதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு , போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில் , சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து , சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.