சீனி மோசடியை தடுக்கவே புர்கா தடை கொண்டுவரப்படவுள்ளது – ஜே.வி.பி. குற்றச்சாட்டு
சீனி இறக்குமதியினால் ஏற்பட்ட மோசடியை தடுக்கவே புர்கா தடை கொண்டுவரப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடியைப் போன்றே சீனி இறக்குமதி ஊடாகவும், பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் தப்பித்துக்கொள்ள இடமளிக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனி இறக்குமதி வரி திருத்தம் ஊடாக பாரியளவு மோசடி இடம்பெற்றமை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் புர்கா தடை குறித்து செயற்கையான ஓர் பேச்சை உருவாக்கியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புர்காவோ அல்லது வேறும் ஓர் விடயத்தைக் கொண்டு வந்து சீனி மோசடியை மூடி மறைப்பதற்கு இடமளிக்கப்படாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.