கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு விமான முனையம் - 2027இல் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேசப் பயணிகள் உள்நாட்டு விமானப் பயணங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில், 800 மில்லியன் ரூபா செலவில் புதிய உள்நாட்டு விமான முனையமொன்று அடுத்த ஆண்டு நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அவர் இதனை அறிவித்தார். விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
15 பில்லியன் ரூபாய் செலவில்..
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முதலாவது முனையம் ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதனைவிட அதிகமான பயணிகளைக் கையாள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2032ஆம் ஆண்டளவில் பயணிகளின் எண்ணிக்கை 16 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, முதலாவது முனையத்தின் கொள்ளளவை 6 மில்லியனிலிருந்து 9 மில்லியனாக அதிகரிக்க 15 பில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் உதவியுடன் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், வாகன நெரிசலைக் குறைப்பதற்காக 400 மில்லியன் ரூபா செலவில் புதிய வாகனத் தரிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. விமான நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு 200 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் அபிவிருத்தி
தனியார் துறையின் பங்களிப்புடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டியெழுப்பி, இயக்கி, கையளிக்கும் முறையின் கீழ் மீள் ஏற்றுமதி மையமொன்றை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் விமான நிலையத்தைப் பிராந்திய விமான சரக்குப் போக்குவரத்து மையமாக அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும். இரத்மலானை விமான நிலையம் விமானி பயிற்சி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, வர்த்தக விமான சேவைகள் மற்றும் பிராந்திய விமானப் போக்குவரத்துக்காக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்காக 6 பில்லியன் ரூபா செலவில் ஓடுபாதையைப் புனரமைத்து நீடிக்கும் திட்டம் 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஓடுபாதையின் நீளம் 1,400 மீற்றரிலிருந்து 1,771 மீற்றராக அதிகரிக்கப்படும் என்றார்.
மேலும், உள்நாட்டுப் பகுதிகளுக்குப் பயணிக்கும் சர்வதேச விமானப் பயணிகளின் வசதிக்காக, 800 மில்லியன் ரூபாய் செலவில் உள்நாட்டு விமான முனையம் ஒன்றை அடுத்த ஆண்டு நிர்மாணிக்க விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்றார்.
மேலதிக தகவல் - அமல்
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri