குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைப்பதற்கு கண்டனம்
தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலையில் நடைபெற்ற சம்பவத்தைவன்மையாக கண்டிக்கிறோம். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து குழுவாக சென்று பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி அதற்கு பாதுகாப்பு படையினர் வழங்கிய பாதுகாப்பு இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக இருக்கிறது.
மக்களுடைய பாரம்பரிய சொத்துக்களை சூறையாடுவதற்கு முயற்சி
30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிலைமாறுகால நீதியினை நிலைநாட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு 2009-க்கு பிறகு ஆட்சிக்கு வந்த எந்த அரசும் சரியான முயற்சிகளை எடுக்காத நிலையில், வடக்குப் பகுதியில் இருக்கின்ற காணிகளையும் அந்த மக்களுடைய பாரம்பரிய சொத்துக்களையும் சூறையாடுவதற்கு எடுக்கின்ற முயற்சி கைப்பற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இராணுவமயமாக்கல் வன பாதுகாப்புத் திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் என்று
சொல்லி மக்களுடைய காணிகளையும் வரலாற்று சின்னங்களையும் கையகப்படுத்தும்
நடவடிக்கையினை இந்த அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளார்.