வெடுக்குநாறிமலை ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்
இலங்கை அரசும் அதன் இராணுவ, பொலிஸ் நிர்வாகங்களும் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் கைதுகள், நில அபகரிப்பு மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளில் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வெடுக்குநாறிமலை ஆலய சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஆலய பூசகர் மற்றும் பக்தர்களின் கைது தொடர்பிலேயே இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அச்சுறுத்தல்
மேலும் அறிக்கையில், “நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் விக்கிரகங்கள் மீள கையளிக்கப்பட்டு அவற்றினை அபகரித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டிய அரச நிர்வாகம் அதற்கு மாறாக பல்லாண்டு காலமாக வழிபட்டு வரும் தமிழ் மக்களின் மீது அரச படைகளை ஏவி விட்டு அச்சுறுத்த முனைகின்றது.
அடக்குமுறைகள்தான் எமது மக்களை போராட நிர்ப்பந்தித்தது என்ற யதார்த்தத்தை சிங்கள தேசம் புறக்கணித்தபடியால்தான் இன்று அது கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த கைதுகளும், தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை தடுத்து வழிபாட்டு தளங்களை அபகரிப்பது, தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரத்தின் அங்கங்களை ஏவி விடுவது, தமிழ் மக்களின் பாரம்பரியத்தை சிதைத்து அவற்றை சிங்கள பௌத்த அடையாளங்களால் உருமாற்றம் செய்து தொடர்ச்சியான நிலப் பரப்பினை கொண்ட தமிழர் தாயகம் என்ற எம் கோரிக்கையை சிதைப்பது இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் திட்டமிட்ட மூலோபாயம் ஆகும்.
எனவே, தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை செயலிழக்கச் செய்வதுமான இந்த செயற்பாடுகளை இடைநிறுத்தி தம்மை தாமே நிர்வகிக்கக் கூடிய இடைக்கால நிர்வாகப் பொறிமுறை ஒன்றினை உடனடியாக உருவாக்குமாறு இந்தியா உட்பட சர்வதேச தளப் பரப்பில் முக்கிய உறுப்பு நாடுகளிடம் எமது இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |