இரண்டு லட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு லட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச ஊழியர்களை குறைக்க பரிந்துரை
பிரித்தானியாவில் அண்மை காலமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பண வீக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டொலருக்க நிகரான பவுண்டின் பெறுமதி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த பிரதமர் லிஸ் ட்ரஸ் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்படி, பிரித்தானியாவின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான Institute for Fiscal Studies என்ற அமைப்பு அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றில் விரைவில் வரவு செலுவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் ஐந்து பில்லியன் பவுண்ட் சேமிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு இருக்காது
இதில் அரசுக்கான செலவுகளை குறைக்கும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஏனைய அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பண வீக்கம் நீடித்தால் அடுத்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.