இலங்கையின் போர்க் குற்றவாளிகள் தொடர்பில் பிரித்தானிய தொழிற் கட்சியின் நிலைப்பாடு
இலங்கையின் (Sri Lanka) போர்க் குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை பிரித்தானிய தொழிற்கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் இன்று (16.05.2024) தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும், பெண்கள் மற்றும் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் அனெலீஸ் டொட்ஸ் ஊடாக தொழிற் கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் (Keir Starmer) வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைவேந்தலுக்கான நாள்
இந்த ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியே வெற்றி பெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த இரங்கலை ஸ்ராமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நினைவேந்தலுக்கான நாள் மட்டுமன்றி, அவசரமாக நீதி கிட்ட வேண்டியதை நினைவூட்டும் நாளாகும்.
கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலமே மடிந்த மக்களை நினைவேந்தி மதிப்பளிக்க முடியும்.
கடந்த கால அநீதிகள்
தமிழ் மக்கள் முகம்கொடுத்த கொடூரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை கடந்த கால அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்கும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கத் தவறியதை தொழிற் கட்சித் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துலகக் குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்றும் தொழிற் கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் ஸ்ராமர் நினைவூட்டியதோடு, இலங்கையில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும், தமிழ் மக்களுக்குப் பரிபூரணமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் டேம் சிபோன் மக்டொனா, கத்தரின் வெஸ்ற், சேர் ஸ்டீபன் ரிம்ஸ், கரத் தொமஸ், ஜேமரஸ் முறே, சாறா ஜோன்ஸ், ஜோன் மக்கொனெல், டோன் பட்லர், வீரேந்திர சர்மா, பரி காடினர் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |