வெளிநாட்டு பயணிகளை அனுமதிப்பது தொடர்பில் பிரித்தானிய அரசின் திட்டம்!
சர்வதேச நாடுகளின் பயணிகளை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பது தொடர்பிலான மேலதிக விபரங்களை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாடுகள் ஆபத்து அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவிற்குள் வரும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பும், மீள திரும்பும் போதும் கோவிட் - 19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
பச்சை நிறம் - பயணிகள் திரும்பி வரும் போது தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் புறப்படுவதற்கு முந்தைய சோதனை (வகை குறிப்பிடப்படவில்லை). அதே போல் பிரித்தானியா திரும்பும் போது பி.சி.ஆர் சோதனை எடுக்க வேண்டும்.
செம்மஞ்சள் நிறம் - பயணிகள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். அதே போல் புறப்படுவதற்கு முந்தைய சோதனை மற்றும் இரண்டு பி.சி.ஆர் சோதனைகளையும் எடுக்க வேண்டும்.
சிவப்பு நிறம் - பயணிகள் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தங்குவதற்கும், புறப்படுவதற்கு முந்தைய சோதனை மற்றும் இரண்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எந்தெந்த நாடுகள் பச்சை, செம்மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திற்குள் அடங்கும் என அரசாங்கம் பட்டியலிடவில்லை.
இது குறித்த அறிவிப்பு மே மாத தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் பிரித்தானிய அரசு அண்மையில் தடை விதித்துள்ளது.
குறித்த நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், சுமார் 40 நாடுகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு: ஓமான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆப்பிரிக்கா: அங்கோலா, போட்ஸ்வானா, புருண்டி, கேப் வெர்டே, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈஸ்வதினி, எத்தோபியா, கென்யா, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, ருவாண்டா, சீஷெல்ஸ், சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே
ஆசியா: பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்
தென் அமெரிக்கா: அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாம், உருகுவே, வெனிசுலா.