இந்தியர்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
கோவிட் 19 வைரசுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தனிமைப்படுத்தல் இன்றி பிரித்தானியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகள் அலெக்ஸ் எலியஸ் (Aleks eliyas) தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுமதியானது எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கள் கிழமை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், எஸ்ட்ராசேனகா மருந்து உற்பத்தி நிறுவனமும் இணைந்து, தயாரிக்கும் ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ராசேனகா தடுப்பூசியை இந்தியாவில் சேரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கோவிஷீல்ட் என்ற வர்த்தக பெயரில் தயாரித்து வருகின்றது.
இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கோவெக்ஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக உலகில் பலருக்கு இந்த தடுப்பூசியே வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை.
இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டு பிரித்தானியாவுக்கு வரும் விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புகளை முன்வைத்தது.
இதனையடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம், கோவிஷீல்ட் தடுப்பூசி சம்பந்தமாக தமக்கு சந்தேகம் இல்லை எனவும், இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கும் அட்டை சரியான தரத்தில் இல்லை எனக் கூறியுள்ளது.
இதனடிப்படையில், இந்திய அரசு தற்போது தரத்துடன் கூடிய டிஜிட்டல் அட்டை ஒன்றை தயாரித்துள்ளதுடன் அதனை வெளிநாட்டவர்களுக்கு வழங்கி வருகின்றது.